விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். கடந்த வாரம் டெல்லியை நோக்கி செல்ல முடிவு செய்தனர்.
ஆனால் விவசாயிகள் அரியானா, பஞ்சாப் மாநிலத்திலேயே நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே விவசாயிகள் சங்கம் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடியும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரவு 8.15 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றதாக தெகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, விவசாயிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு பருப்பு வகைகள், சோளம் மற்றும் கதர் விளைபொருட்கள் அரசாங்க ஏஜென்சிகளால் குறைந்தபட்ச ஆதாய விலைக்கு வாங்கப்படும். கொள்முதல் செய்வதற்கான அளவுகோல் எதுவும் கிடையாது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பரிந்துரைத்துள்ளார். ஆனால், விவசாயிகள் உடனடியாக அந்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களுடைய விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த இரண்டு நாட்களில் முடிவை சொல்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பந்தேர் இதுகுறித்து கூறுகையில் “நாங்கள் இதுகுறித்து 19 மற்றும் 20-ந்தேதிகளில் வல்லுநர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்துவோம். அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்” என்றார்.