Tamilசெய்திகள்

மது குடித்ததை கண்டித்ததால் 4 பேர் வெட்டி கொலை! – திருப்பூரில் பயங்கரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வீட்டில் செந்தில்குமார் தனியாக இருந்தார். அப்போது திடீரென 3 பேர் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவா்கள் திடீரென்று செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். இதனால் ‘அய்யோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று செந்தில்குமார் அபயக்குரல் எழுப்பினார். அவருடைய சத்தம் கேட்டு பதற்றத்துடன் மோகன்ராஜ் அங்கு ஓடிவந்தார். அப்போது கொலையாளிகள் செந்தில்குமாரை வெட்டுவதை பார்த்து அவர் நெஞ்சம் பதைபதைத்தது. உடனே செந்தில்குமாரை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் அதற்குள் அந்த நபர்கள் செந்தில்குமாரை வெட்டி வீழ்த்தினர். கொலையை தடுக்க முயன்ற மோகன்ராஜையும் கொடூரமாக வெட்டினர். இதனால் மோகன்ராஜும் அவர்களிடம் தப்பிக்க கூக்குரல் எழுப்பியவாறு தப்பிக்க முயன்றார். ஆனால் அவர்கள் அவரையும் வெட்டி சாய்த்தது. இதற்கிடையில் மோகன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய தாயார் புஷ்பவதி, புஷ்பவதியின் அக்காள் ரத்தினாம்பாள் ஆகியோரும் அங்கு வந்தனர். கொலைவெறி அடங்காத அவர்கள் பெண்கள் என்றும் பாராமல் அவர்களையும் வெட்டினர். இதனால் அவர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர் 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இவை அனைத்தும் சிறிது நேரத்தில் நடந்து விட்டது.

கொலையில் ஈடுபட்டவர்கள் வெறி கொண்டு வெட்டி வீழ்த்தியதால் அந்த தெரு முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன. எனவே கை, கால்களை வெட்டி வீசி இருக்கலாம் என்று தெரிகிறது. தெரு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்தது. இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மற்றும் பல்லடம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கொலையாகி கிடந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் கொலையானவர்களின் உறவினர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் கொலையாளிகளை கைது செய்த பிறகு உடல்களை எடுக்க அனுமதிப்போம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 உடல்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீபோல் பரவியது. இதனால் நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் கூட்டம் கூடியது. மேலும் பதற்றமும் அதிகரித்தது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்ததால் சரக்கு வேன் ஒன்றை வைத்திருந்தார். அந்த வேனுக்கு டிரைவராக ஒருவர் வேலை செய்துள்ளார். அந்த டிரைவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்தினார். ஆனால் அந்த டிரைவர் வேலையை விட்டு நின்ற பிறகும் செந்தில்குமார் வீட்டிற்கு வரும் பாதையில் அமர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது செந்தில்குமார் அவரை எச்சரித்து வேறு பகுதிக்கு சென்று மது அருந்துமாறு பலமுறை கூறியுள்ளார்.

இந்த நிலையில் அந்த டிரைவரும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் நேற்று இரவு செந்தில்குமாரின் வீட்டிற்கு செல்லும் பாதையில் அமர்ந்து மதுகுடித்து உள்ளனர். இதை பார்த்த செந்தில்குமார் அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து போகாமல் செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை வெட்டியுள்ளனர். இவருடைய அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி மற்றும் ரத்தினாம்மாள் ஆகியோரையும் கொலை செய்து விட்டு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் தப்பி செல்லாதவாறு பல்லடத்தில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். எனவே கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர். இதனிடையே கொலையான 4 பேரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.