மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்

மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் மாவட்ட கோர்ட்டு வளாகத்திற்கு காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்டோரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர். இதையடுத்து விழா தொடங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர். மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools