Tamilசெய்திகள்

மதுரை பட்டாசு ஆலை விபத்து – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தை அடுத்து, சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த ஆலையில் ஆண்கள், பெண்கள் என சுமார் 40 பேர் வேலை செய்தனர்.

நேற்று மதியம் இந்த பட்டாசு ஆலையில் உள்ள ரசாயன பொருட்கள் வைத்து இருக்கும் அறையில் இருந்து எடை போடப்பட்டு, வெடி மருந்துகள் 100 அடி தூரத்தில் உள்ள மற்றொரு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வெடிமருந்து பவுடரை சல்லடையில் அலசி கொண்டிருந்த போது திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீப்பற்றியது.

இதைதொடர்ந்து அருகில் உள்ள அறைகளுக்கும் தீ பரவியது. இந்த சம்பவத்தில் மொத்தம் உள்ள 5 அறைகளில் 3 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

இதில் 2 அறைகளில் வேலை செய்து கொண்டிருந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போய் இருந்தன. மேலும் 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டி.கல்லுப்பட்டி போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் அதிகாரிகளும் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பலியான 5 பெண்களின் உடல்களையும் தீயணைப்பு படையினர் மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அங்கு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

பலியான பெண்கள் விவரம் வருமாறு:-

1) பேரையூர் அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி வேலுத்தாயி (வயது 45).

2) டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காடனேரியை சேர்ந்த கருப்பையா மனைவி அய்யம்மாள் (65).

3) சிலார்பட்டியை சேர்ந்த பாண்டி மனைவி லட்சுமி.

4) விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரை சேர்ந்த சுருளியம்மாள்.

5) அத்திப்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரம் மனைவி காளீஸ்வரி(35).

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தது, காடனேரியை சேர்ந்த மகாலட்சுமி (45), லட்சுமி (45), விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி (39) என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளர்கள் லட்சுமி, மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.