Tamilசெய்திகள்

மதுரை சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது

மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா
எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள்
மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. தேர் புதுப்பித்தல் பணி, மாசி வீதிகளில் தேர் வலம் வருவதற்கான
ஏற்பாடுகள், கோவிலில் மின் அலங்காரம் என பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே நகர் மற்றும் சுற்றுப்பகுதி
மக்கள் இடையே முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சுவாமி வழக்கம் போல் காலை, இரவு என இருவேளையும் மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு
காட்சியளிக்க உள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் என்று சொல்லக்கூடிய திருவிழா நிறைவு நாளை முடிவு செய்து கொண்டு தொடங்க பெறுவதாகும். அதன்படி சித்திரை
தீர்த்தத்தை கணக்கில் கொண்டு அமாவாசை கழித்த இரண்டொரு நாளில் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்குகிறது.

12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நாளை(செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள்
மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு
வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள்
திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்பத்தில் நடைபெறும். இதற்காக அந்த பகுதியில் பக்தர்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி
நடைபெற்று வருகிறது.

திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில்
அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்கான கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளத்தில் (WWW.maduraimeenakshi.Org) இன்று முதல் 7-ந் தேதி வரை பெறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை
உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் டிக்கெட் வாங்க வேண்டும். டிக்கெட் பெற்றவர்கள் அன்று காலை 9 மணி வரை
மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாண விழாவில் இரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

திருவிழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். திருக்கல்யாணத்திற்கு மறுநாள் வருகிற 15-ந் தேதி
மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 16-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்த திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.