மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கியது
மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 2019 ஜனவரியில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச் மாதம் கையெழுத்தானது. மொத்த நிதி தேவையான ரூ.1,977.8 கோடியில் 82 சதவீத தொகையான ரூ.1,627.70 கோடியை ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள தொகையை இந்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக வேறெந்த கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருந்தது. கடந்த 2023 ஆகஸ்டு மாதம் 17-ந் தேதியன்று மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. இதையடுத்து கடந்த ஜனவரியில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயின்று வரும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு போதிய இட வசதியும், மருத்துவ பயிற்சியும் கிடைக்காத காரணத்தால், அவர்களில் 100 பேரை மதுரையில் வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பையும் எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
அதன்படி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் அந்த மருத்துவமனையில் இருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள் 100 மாணவர்களுக்கான வகுப்புகள், விடுதி வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை வாடகைக்கு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
கட்டுமானப் பணிகளுக்கான நிதி தற்போது மத்திய அரசு நிதியுடன் சேர்த்து ரூ.1977.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் 21 கோடி மதிப்பீட் டில் ஆறு கிலோ மீட்டருக்கு சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளது.
தோப்பூரில் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற நிலையில், கட்டுமான பணிகள் இன்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி வாடகை கட்டிடத்திற்கான டெண்டரில் நான்கு கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய நிதிக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இம்மாதம் நடைபெறவுள்ள நிதிக்குழு கூட்டத்தில் அதற்கான ஒப்புதலும் கிடைத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில் இன்று கட்டுமான பணிகள் முறையாக தொடங்கியுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 10 தளங்களாக 870 படுக்கை வசதிகளுடன் 33 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எப்போது வரும்? என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை “எல் அண்ட் டி” நிறுவனம் இன்று தொடங்கி உள்ளது.
முதல்கட்டமாக கட்டுமான பணிகளுக்கு நீர் எடுப்பதற்கான போர்வெல் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கும் பணிகள் தொடங்கியது.