சென்னை சைதாப்பேட்டையில் பசுமை சைதை திட்டம் 5-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில், குழந்தைகளின் பெயரில் மரக்கன்று நடும் விழாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் என மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மதுரையில் அமையும் என இடம் தேர்வு செய்யப்பட்டு, டிசம்பர் 17-ந்தேதி மத்திய அரசு சார்பில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மதுரை தோப்பூர் பகுதியில் ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கைகளுடன் 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்பிறகு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதமர் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டினார். நவம்பர் 25-ந்தேதி ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
அதற்காக தமிழக அரசு 224.24 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தது. அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி கட்டுவதற்காக மத்திய அரசு ஜைக்கா நிதி நிறுவனத்துடன் 2021-ம் ஆண்டு மார்ச் 26-ந்தேதி ஒப்பந்தம் ஏற்படுத்தியது.
அந்தவகையில் 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 6 ஆண்டு காலம் இந்த பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்றவுடன் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்டுமான பணிகளை உடனே தொடங்க வேண்டும் எனவும் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.
இந்தநிலையில், கடந்த 4-ந்தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், ‘நீங்கள் 150 மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்தி கொள்ளலாம். அவ்வாறு சேர்க்கை நடத்தும்போது, கல்லூரி இல்லாத பட்சத்தில், வேறு இடத்தில் வகுப்புகளை தொடங்கலாம். மாணவர்கள் 2 ஆண்டுகள் படித்து முடிக்கும்போது, எய்ம்ஸ் வளாகத்தில் கல்லூரி கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு மாணவர்களை இங்கு இடமாற்றம் செய்து கொள்ளலாம்,’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் ‘அந்த மாணவர்களை புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி அல்லது மதுரையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி அல்லது அரசு கலை கல்லூரி அல்லது மதுரையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்த்து, அங்கு மருத்துவ வகுப்புகளை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்துக்களை எல்லாம் தமிழக அரசு சார்பில் ஆராயப்பட்டு கொண்டிருக்கிறது. அந்தவகையில் மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரியில் ஏற்கனவே 250 மாணவர்கள் படித்து கொண்டிருக்கின்றனர். தற்போது கூடுதலாக இந்த 150 மாணவர்களை அங்கே சேர்க்கும் போது, படிப்பதற்கான போதுமான கட்டமைப்புகள் இருக்காது.
எனவே, மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவக்கல்லூரிகளில் தலா 50 மாணவர்கள் என 150 மாணவர்களை அனுமதித்து வகுப்புகளை தொடங்கலாமா அல்லது இதனுடன் தூத்துக்குடி, திருச்சி ஆகிய மருத்துவக்கல்லூரியையும் சேர்த்து, 5 மருத்துவக்கல்லூரியில் தலா 30 என மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாமா, என்பது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடந்து கொண்டு இருக்கிறது. இது குறித்து அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்.