17-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை காரணமாக நாள்தோறும் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி டோல்கேட் பகுதியில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாலை 4.30 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கண்டெய்னர் வேனை மறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கண்டெய்னரை திறந்து சோதனை செய்தனர்.
அப்போது அதில், 8 கிலோ தங்கம், வைரம், வெள்ளி கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது, டிரைவரிடம் எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து அதிகாரிகள் கண்டெய்னருடன் தங்கம், வெள்ளி, வைரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, வைர கட்டிகளை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரத்தின் மதிப்பு ரூ.3.64 கோடி ஆகும்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சிட்டம்பட்டி டோல்கேட் அருகில் இன்று அதிகாலை வாகன சோதனை செய்தபோது 8 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி, வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3.64 கோடி ஆகும்.
டிரைவரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மதுரைக்கு ஏன் கொண்டு வரப்பட்டது? என தெரியவில்லை. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4.74 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மதுரை மாவட்டத்தில் ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட் களுக்கு உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டால் அதனை உரியவரிடம் அளிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.