மதுபோதையில் வாகன ஓட்டிய கணவருக்காக போலீசிடம் வாக்குவாதம் செய்த மனைவி!

உடுமலை தளி ரோட்டில் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் லேசான தள்ளாட்டத்துடன் வந்த நபரை தடுத்து நிறுத்தினர்.மேலும் குடித்திருக்கிறாரா என்று சோதனை செய்வதற்காக ‘வாயை ஊது’ என்று சொன்னபோது அவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவருடைய மனைவிக்கு போன் செய்து வரவழைத்தார்.அங்கு வந்த அவருடைய மனைவி போலீசாரிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார். மதுக்கடைகள் திறக்கிறது தப்பில்லேன்னா குடிக்கிறது எப்படி தப்பாகும். அவர் என்ன சாராயம் காய்ச்சியா குடித்தார். அரசாங்கம் விற்கும் மதுவைத் தானே வாங்கிக் குடித்தார். இதோ அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடையும் அங்கேயே பாரும் செயல்படுகிறது.

குடிச்சிட்டு வாகனம் ஓட்டறது தப்புன்னா பாரிலே எதுக்கு பார்க்கிங். அங்கே குடிச்சிட்டு ரோட்டிலே படுக்க முடியுமா? வீட்டுக்கு போய்தானே ஆகணும். அப்போ நீங்க எப்படி பிடிக்கலாம்’என்று போலீசாரிடம் எகிறினார். போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு ஏராளமானவர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

அந்த நபருக்கு குடி பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக போலீசார் முயன்றனர். ஆனால் குடிச்சதை நாங்களே ஒத்துக்கும் போது எதுக்கு டெஸ்ட் பண்ணனும். எங்கேயும் வர முடியாது என்று அடம் பிடித்தார். இதனையடுத்து போதை ஆசாமியின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். அந்த அம்மா நியாயமா தானே கேக்கறாங்க என்று ஒரு தரப்பினரும், போலீசாரின் கையை கட்டிப் போட்டா இது மாதிரி தப்பு பண்ணினவங்களெல்லாம் எகிறத் தான் செய்வாங்க என்று இன்னொரு தரப்பினரும் விமர்சனத்தை முன் வைத்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools