மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று, ரோஸ் அவென்யு கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதனால் இன்று சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜாமின் வழங்கியதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்கும் வரை ஜாமின் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது. சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர டுடேஜா கொண்ட பெஞ்ச் முன் உடனடியாக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பு தங்கள் வாதங்களை முன் வைத்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன் வைக்க வாய்ப்பு வழங்கவில்லை. அமலாக்கத் துறையின் ஆவணங்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரிசீலிக்கவில்லை. டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் ஜாமின் உத்தரவு அமைந்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தவறு உள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
பாராளுமன்ற தேர்தலின்போது சுப்ரீம் கோர்ட் கெஜ்ரிவாலுக்கு சுமார் 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.