மதுபானங்களை விளம்பரம் செய்யும் நடிகைகளுக்கு எதிர்ப்பு
நடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திய தமன்னா கோர்ட்டு வழக்கு சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது முன்னணி நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அழகு சாதன பொருட்களை போட்டி போட்டு விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். இதனை மிஞ்சும் வகையில் ஹன்சிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிநாட்டு மதுபானங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திரைப்படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது தீங்கானது என்று விளம்பரம் செய்யும் நிலையில் இவர்கள் உணவுடன் மதுபாட்டிலை வைத்தும், கிளாசில் மது ஊற்றுவது போன்றும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இளைஞர்களை குடிக்க தூண்டுவதாக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது. பூஜா ஹெக்டே தற்போது விஜய் ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.