மதுக்கடை செட்டால் இயக்குநர் வெங்கட் பிரபு படத்திற்கு வந்த சிக்கல்!
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாண்டியா மாவட்டம், மேலுகோட் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு அருகில் படக்குழு மதுக்கடை செட் ஒன்று அமைத்து படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கோவிலுக்கு அருகில் விதிகளை மீறி செட் அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பின்னர் அந்த செட் அப்புறப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படக்குழு மேலுகோட் பகுதியில் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கும் பொழுது மதுக்கடை செட் அமைத்து காட்சிகள் படமாக்கப்படவுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.