மதவெறியால் ஏற்படும் துன்பங்களை உலகம் தற்போது கண்டு வருகிறது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு
இந்திய தேசியவாதத்திலும் கலாச்சாரத்திலும் நம்பிக்கையுடைய தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொது சேவை சங்கம், ஆர்.எஸ்.எஸ். (RSS) எனப்படும் ‘ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் ஸங்’. இந்த அமைப்பின் கிளைகள் உலகின் முக்கிய நகரங்களில் உள்ளது.
சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களை தன்னார்வலர்களாக இதில் இணைத்து கொண்டுள்ளனர். இயற்கை பேரழிவு, இயற்கை சீற்றம், போர், பெருந்தொற்று உட்பட பல அவசரகாலங்கள் மற்றும் நெருக்கடி காலங்களில் இதன் தன்னார்வலர்கள் நாடு முழுவதும் சென்று தேச சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாக்பூரில் 1925-ஆம் வருடம் விஜயதசமி பண்டிகையன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. எனவே வருடாவருடம் அதன் கூட்டம் விஜயதசமியன்று நடைபெற்று வருகிறது.
இவ்வருட விஜயதசமி சந்திப்பு கூட்டம், மகாராஷ்டிரா மாநில நாக்பூர் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இதன் தலைவர் மோகன் பகவத் தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மதவெறியால் ஏற்படும் துன்பங்களை உலகம் தற்போது கண்டு வருகிறது. காசாவில் நடைபெறும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர்களை முடிவுக்கு கொண்டு வர தீர்வு காண்பது உலக நாடுகளுக்கு மிக கடினமாக உள்ளது. இதனால் உலக நாடுகள் சந்தித்து வரும் சமகால சவால்களுக்கும், சிக்கல்களுக்கும் நிரந்தர தீர்வை தேடி பாரதத்தை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளன. பாரதத்தின் தொன்மையான சனாதன வழிமுறைகளின் மூலம் ஒரு புதிய பாதையை தேடுகின்றன. இதனை வழங்க பாரதம் முன் வர வேண்டும்.
இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.