X

மண்டல கூடைப்பந்து சாம்பியன்ஷிப் – கோவை, சேலம் மாவட்ட அணிகள் முதலிடம்

பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப், தமிழ்நாடு கூடைப் பந்து கழகம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சார்பில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மண்டல அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 16 வயதிற்கு உட்பட்ட கூடைப்பந்து வீரர்-&வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

இதன் இறுதிப் போட்டிகள் நேற்று இரவு நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் ஈரோடு-சேலம் அணிகள் மோதியதில் 49-65 என்ற புள்ளி கணக்கில் சேலம் மாவட்ட அணியினர் வெற்றி பெற்றனர். நாமக்கல் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணியினர் 3 மற்றும் 4-ம் இடங்களைப் பிடித்தனர்.

இதேபோல மகளிர் பிரி வில் கோவை-ஈரோடு அணிகள் மோதியதில் 76-க்கு 34 என்ற புள்ளி கணக்கில் கோவை மாவட்ட அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற, ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளுக்கு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் சான்றிதழ்கள், சுழல் கோப்பைகள் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.

மின்னொளியில் நடைபெற்ற இந்த கூடைப்பந்து போட்டியை நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட பொதுமக்கள், விளையாட்டு ரசிகர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.