Tamilசெய்திகள்

மண்டலத்திற்கு உட்பட்ட ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் வருகிறார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மண்டல வாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கினார். முதலாவதாக வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 4 மாவட்டங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில் மறுநாள் 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்த அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து 2-வது பயணமாக சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஆய்வு கூட்டம் நாளை 15-ந் தேதி மற்றும் நாளை மறுநாள் 16-ந் தேதி, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இதற்காக நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு 4 மாவட்ட கலெக்டர்கள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா மற்றும் 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

அன்று இரவு சேலத்தில் தங்கும் முதல்வர், நாளை மறுநாள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் இனிவரும் நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கிடையே மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முதலமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து துறையினரும் விழிப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக கூட்டம் நடைபெறும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு வழங்குவது குறித்து துணை கமிஷனர் மாடசாமி, லாவண்யா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

மாநகர போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கலெக்டர் அலுவலகம் இன்று காலை முதல் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் தவிர பிற நபர்களை உள்ளே அனுமதிக்காமல் தீவிர சோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீசார் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கலெக்டர் அலுவலகத்தை இன்று மாலை முதல் கொண்டு வருகிறார்கள். மேலும் முதலமைச்சர் மாநகரில் உள்ள போலீஸ் நிலையம் சென்று ஆய்வு செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதனால் போலீஸ் நிலையங்களும் தூய்மைப்படுத்தி அனைத்து விதத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி அவர் செல்லும் பாதைகளில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.