இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.
கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஆதிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்களின்படி, மணிரத்னம் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் ஆதி இந்த படத்தில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதி கடைசியாக சமந்தாவின் யு-டர்ன் படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
அமரர் கல்கி எழுதியிருக்கும் இந்த கதையில், ஆதித்த கரிகாலனான விக்ரமும், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்க இருக்கின்றனர்.