Tamilசெய்திகள்

மணிப்பூரில் 2 பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட விவகாரம் – போலீஸ் டி.ஜி.பி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் கலவரத்தின் போது 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட 2 பெண்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, தாமதமாக வழக்குப்பதிவு செய்ததாக மணிப்பூர் மாநில அரசை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், நேற்றும் அதே அமர்வு முன் இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன. பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெறக்கூடாது என்று சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கலவரம் தொடங்கிய பிறகு 6,523 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக மணிப்பூர் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ஒரு குற்றம் தங்கள் விசாரணை வரம்புக்குள் இல்லாத பகுதியில் நடந்தாலும், எந்த போலீஸ் நிலையமும் ‘பூஜ்ய முதல் தகவல் அறிக்கை’ பதிவு செய்யலாம்.

பிறகு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அதை அனுப்பி, வழக்கமான முதல் தகவல் அறிக்கையாக மாற்றலாம். அந்தவகையில், மானபங்க வீடியோ வெளியானவுடன், பூஜ்ய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அதன்பின் நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர். அவர்கள் கூறியதாவது:

2 பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் எந்த தேதியில் நடந்தது, பூஜ்ய முதல் தகவல் அறிக்கை, வழக்கமான முதல் தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற விவரங்களை மணிப்பூர் அரசு தெரிவிக்க வேண்டும். 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் எத்தனை பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன? மொத்தத்தில், மாநில போலீஸ் விசாரணை மந்தமாக நடந்துள்ளது.

நீண்ட தாமதத்துக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்படவில்லை. வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. அரசியல் சட்ட எந்திரம் செயலிழந்து விட்டது. சட்டம்-ஒழுங்கில் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர். ஆகவே, இதுதொடர்பாக மணிப்பூர் மாநில போலீஸ் டி.ஜி.பி. அடுத்தகட்ட விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.