X

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம் – 3 பேர் பலி

மணிப்பூரில் கடந்த மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக கடந்த மாதம் 3-ம் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, குகி பழங்குடியினரின் 2 கிளை அமைப்புகள் தேசிய நெடுஞ்சாலை 2-ல் நடத்திய சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என நேற்று கூறியது. உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டுக்கொண்டதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இன்று காலை முதல் மாலை வரை தற்காலிகமாக விலக்கி கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் கொய்ஜுமந்தபி கிராமத்தில் புதிதாக வன்முறை பரவியது. இதில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியை பாதுகாப்பதற்காக கிராமவாசிகளால் நியமிக்கப்பட்டவர்களுக்கும், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்களுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் கிராம தன்னார்வலர்கள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

Tags: tamil news