மஞ்சு வாரியரை மிரட்டிய இயக்குநர் மீது வழக்குப் பதிவு
மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் திலீப்பை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் பட உலகிலும் அறிமுகமாகி உள்ளார். மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனுக்கும் மஞ்சு வாரியருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீ குமார் மீது கேரள டி.ஜி.பி.யிடம் மஞ்சு வாரியர் புகார் அளித்தார். அதில், “இயக்குனர் ஸ்ரீகுமார் சமூக வலைத்தளத்தில் என்மீது அவதூறு பரப்பி வருகிறார்.
அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூறியிருந்தார். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை மறுத்த ஸ்ரீகுமார் மேனன் கூறும்போது, “காரியம் முடிந்ததும் கைகழுவுபவர்தான் மஞ்சுவாரியர். அவரை நம்ப வேண்டாம். திலீப்பை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறியபோது கையில் வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே உள்ளது என்று அவர் சொன்னதை நான் மறக்கவில்லை.
அப்போது ரூ.25 லட்சம் கொடுத்து விளம்பர படத்துக்கும் சினிமாவுக்கும் அவரை ஒப்பந்தம் செய்தேன். மஞ்சுவாரியருக்கு என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. என்மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன்’‘ என்றார். இந்த நிலையில் மஞ்சுவாரியர் புகார் தொடர்பாக திருச்சூர் கிழக்கு போலீசார் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.