மங்கூஸ் பேட் பயன்படுத்த வேண்டாம் என்று டோனி கேட்டுக்கொண்டார் – மேத்யூ ஹைடன்

ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடி இருந்தார். இதில் சென்னை அணி பட்டம் வென்ற 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவர் புதுமையான பேட் ஒன்றை பயன்படுத்தினார். ‘மங்கூஸ்’ என்று அழைக்கப்பட்ட அந்த குட்டி பேட்டில் கைப்பிடி நீளமாகவும், பந்தை எதிர்கொள்ளும் தட்டையான பகுதியின் நீளம் குறைவாக இருந்தது. ஏதோ சிறுவர்களுக்கான பேட் போன்று காணப்பட்டாலும் பெரும்பாலான ஆட்டங்களில் அவர் ‘மங்கூஸ்’ பேட்டுடன் தான் களம் கண்டார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் 93 ரன்கள் நொறுக்கினார். மற்றபடி பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

முதன்முதலில் ‘மங்கூஸ்’ பேட்டை பயன்படுத்தப்போவதாக கூறியதும் சென்னை அணியின் கேப்டன் டோனி என்ன சொன்னார்? என்று ஹைடனிடம் நேற்று ஆன்-லைன் வீடியோ மூலம் கேட்கப்பட்டது. அதற்கு 48 வயதான ஹைடன் கூறியதாவது:-

‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் கேளுங்கள் நான் தருகிறேன். இந்த பேட்டை மட்டும் பயன்படுத்த வேண்டாம்’ என்று டோனி என்னிடம் கூறினார். தயவு செய்து இந்த பேட்டை பயன்படுத்தாதீர்கள் என்று வற்புறுத்திக்கேட்டுக் கொண்டார். அதற்கு நான், ‘இந்த வகை பேட்டில் நான் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறேன். அது மட்டுமின்றி பேட்டின் நடுப்பகுதியில் பந்து பட்டால் 20 மீட்டர் தூரம் கூடுதலாக பறக்கும். அதனால் கவலைப்படாதீர்கள்’ என்று டோனியிடம் கூறி அவரை சமாதானப்படுத்தினேன். மங்கூஸ் பேட்டை நான் பயன்படுத்தியது, துணிச்சலான முடிவு. இந்த பேட்டுடன் உற்சாகமாக ரசித்து விளையாடினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஹைடன் 16 ஆட்டங்களில் 346 ரன்கள் எடுத்திருந்தார். இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி மகுடம் சூடியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news