X

மங்களூர் குண்டுவெடிப்பில் மேலும் 2 பேருக்கு தொடர்பு!

மங்களூர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஷாரிக்கும், சிவமொக்கா டவுன் சித்தேஷ்வர் நகரைச் சேர்ந்த சையது யாசின், மங்களூருவைச் சேர்ந்த மாஸ்முனீர் ஆகியோரும் கூட்டாளிகள் ஆவார்கள். இதில் சையது யாசினும், மாஸ் முனீரும் பி.யூ. கல்லூரியில் படித்தபோது நண்பர்கள் ஆனார்கள். இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வீடியோக்களை பார்த்து வந்தனர். மேலும் அதுபோல் இந்தியாவிலும் பயங்கரவாதத்தை நிகழ்த்த திட்டமிட்டு வந்தனர். மேலும் இவர்கள் செல்போன்கள், வாட்ஸ்-அப் மூலமாக தங்களது உரையாடல்களை நடத்தி வந்தனர். மேலும் டெலிகிராம், மெசஞ்சர் செயலி உள்ளிட்டவை மூலமாகவும் தங்களது உரையாடல்களை தொடர்ந்து வந்தனர்.

இந்த உரையாடல்களின் வாயிலாகத்தான் சையது யாசின், மாஸ் முனீர் ஆகியோருடன் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தைச் சேர்ந்த ஷாரிக்கிற்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் இவர்கள் 3 பேரும் வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான கட்டுரைகள், தகவல்கள் ஆகியவற்றை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பகிர்ந்து கொண்டனர். மேலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அதிபயங்கர வீடியோக்களான தலை துண்டித்தல், கொடூரமாக கொலை செய்தல் போன்ற வீடியோக்களையும் பார்த்து வந்துள்ளனர். இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான டி.வி. சேனல்களில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

இதில் யாசின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஆவார். மாஸ் முனீர் மெக்கானிக் என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்க திட்டமிட்டனர். யாசின் ரிலே சர்க்கியூட் போர்டு, டைமர் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வாங்கினார். அலுமினியம் பவுடர் அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து பேட்டரிகள், சுவிட்ச்சுகள் ஆகியவற்றை கொண்டு யாசின் மற்றும் முனீர் சேர்ந்து வெடிகுண்டு ஒன்றை தயாரித்தனர். கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி அந்த வெடிகுண்டை சிவமொக்கா மாவட்டத்தில் துங்கா நதிக்கரையோரம் குருபுரா-புரலே பகுதிகளுக்கு இடையேயுள்ள ஒரு தோட்டத்தில் வைத்து வெடிக்கச்செய்து பயிற்சி பெற்றனர்.

ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவில் அது பெரிய அளவில் வெடிக்கவில்லை. இருப்பினும் அதை அவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துக்கொண்டனர். பின்னர் பெரிய அளவில் வெடிகுண்டு தயாரிக்க வேண்டும் என்று 3 பேரும் திட்டமிட்டனர். இந்த திட்டங்களுக்கு ஷாரிக் மூளையாக செயல்பட்டு உள்ளார். இதனிடையே போலீஸ் தேடுவதை அறிந்த ஷாரிக் உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு, மும்பை, கோவா ஆகிய பகுதிகளுக்கு தப்பிச் சென்றனர். பின்னர் அவர்கள் சிவமொக்காவுக்கு திரும்பி இருந்தனர். ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த யாசின், மாஸ் முனீர் ஆகியோரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.