கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள செம்பரிக்கா பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ‘டான்’ தஸ்லின்(வயது40). இவர் மீது கொலை உள்பட 12 வழக்குகள் காசர்கோடு போலீஸ் நிலையத்தில் உள்ளது.
மேலும் 2011-ம் ஆண்டு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளி வந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு சென்ற ‘டான்’ தஸ்லின் அங்குள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடித்ததாக 5 கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ‘டான்’ தஸ்லின் சமீபத்தில் தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ‘டான்’ தஸ்லின் தனது சகோதரருடன் காரில் மங்களூரில் இருந்து கோழிக்கோடுக்குச் செல்ல திட்டமிட்டார்.
அவரது கார் மங்களூரு அருகே உள்ள கலம்பூர் பகுதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது இன்னொரு காரில் வந்த ஒரு கும்பல் ‘டான்’ தஸ்லின் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்தது. அந்த காரில் இருந்தவர்கள் ‘டான்’ தஸ்லினை தங்கள் காரில் கடத்திச்சென்றனர்.
இது பற்றி ‘டான்’ தஸ்லினின் சகோதரர் போலீசில் புகார் செய்தார். அவரது செல்போன் டவர் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மங்களூரு பி.சி. ரோடு பகுதியில் ‘டான்’ தஸ்லின் இருப்பதாக அவரது செல்போன் டவர் மூலம் தெரிய வந்தது.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ‘டான்’ தஸ்லின் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை கடத்திச் சென்ற கும்பல் தான் அவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
‘டான்’ தஸ்லின் மீது ஏராளமான வழக்குகள் உள்ளதால் எதற்காக அவரை அந்த கும்பல் சுட்டுக்கொன்றது என்பது உடனடியாக தெரியவில்லை.