X

மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்த கமல்ஹாசன்

2021-ம் ஆண்டில் மக்கள் நலன் விரும்பும் நல்லாட்சி ஏற்படும் என்று கூறியுள்ள கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த புதிய பொதுச்செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசியல் மக்கள் நலனை விட்டு விலகியும், சுயநலமிக்கதாகவும், தரம் தாழ்ந்தும், தன் பாரம்பரிய பெருமைகளை இழந்து நின்ற சூழலில் அரசியல் நாகரிகத்தை மீட்டெடுக்கவும் மீண்டும் மக்களுக்காக பாடுபடும் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது தான் மக்கள் நீதி மய்யம் கட்சி. கட்சி ஆரம்பித்த 14 மாதத்திலேயே பாராளுமன்ற தேர்தலை துணிவுடன் சந்தித்தோம்.

அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான பெரும் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் அளித்தனர். அந்த ஆதரவை மேலும் அதிகப்படுத்தி வருகிற 2021-ல் மக்கள் நலன் விரும்பும் ஒரு நல்லாட்சி அமைத்திட, உத்வேகத்துடன் பாடுபடுவது என்று முடிவு செய்து, கட்சியை வலுப்படுத்தும் சில நடவடிக்கைகள் எடுக்க விரும்பினேன். வாக்காளர்கள் அனைவரையும், கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக சந்திக்கும் வண்ணம் கட்சி நடவடிக்கைகளை எடுப்பதற்கு விரும்பினேன்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில், தலைவர் பதவியின் கீழ் துணைத்தலைவர், 6 பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் வரை சென்றடைய பொதுச்செயலாளர் பதவி வடக்கு-கிழக்கு மற்றும் தெற்கு-மேற்கு என 2 ஆக உருவாக்கப்படுகிறது. மேலும் பொதுச்செயலாளர்-ஒருங்கிணைப்பு, பொதுச்செயலாளர்-கொள்கை பரப்பு, பொதுச்செயலாளர்-சார்பு அணிகள், பொதுச்செயலாளர்-தலைவர் அலுவலகம் என்ற பதவிகள் புதிதாக உருவாக்கப்படுகிறது.

இதன்படி முதல்கட்டமாக, ஒருங்கிணைப்பு பொதுச்செயலாளராக ஆ.அருணாச்சலம், வடக்கு-கிழக்கு பொதுச்செயலாளராக ஏ.ஜி.மவுர்யா (ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி), கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக ஆர்.ரங்கராஜன் (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி), சார்பு அணிகள் பொதுச்செயலாளராக வி.உமா தேவி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் அலுவலக பொதுச்செயலாளராக பஷீர் அகமது (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு-மேற்கு பொதுச் செயலாளர்-கமல்ஹாசன் அலுவலகத்தின் நேரடி பார்வையில் செயல்படும். டாக்டர் ஆர்.மகேந்திரன் துணைத்தலைவராகவும், ஏ.சந்திரசேகர் பொருளாளராகவும் தொடர்ந்து செயல்படுவார்கள். புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொதுச்செயலாளர்களும் தமிழகத்தில் மக்கள் நலனுக்கான நல்லாட்சியை அமைத்திட பணியாற்றுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.