Tamilசெய்திகள்

மக்கள் தொகை வீழ்ச்சியை தொடர்ந்து திருமண பதிவிலும் சரிவை சந்திக்கும் சீனா

சீனா ஏற்கனவே மக்கள் தொகையில் வீழ்ச்சயிடைந்த நிலையில், தற்போது திருமண பதிவின் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2022- ம் ஆண்டில் திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவு ஒரு நிலையான சரிவைக் கண்டு வருவதாகவும், கொரோனா காலத்தினால் திருமணத்தின் மொத்த எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வெறும் 6.83 மில்லியன் தம்பதிகள் தங்கள் திருமணப் பதிவை செய்துள்ளனர். இதுவே, சிவில் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுப்படி, முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கில் பல வாரங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது வளாகத்திலோ அடைபட்டு கிடந்தனர். தொற்றுநோய் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியதால் திருமணங்கள், குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

2022- ம் ஆண்டில், ஆறு சதாப்தங்களில் இல்லாத அளவில் கடந்த 2022ம் ஆண்டில் முதல் முறையாக சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்தது. சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளது, இது 2021ல் 7.52 ஆக இருந்தது.

மக்கள் தொகையை அதிகரிக்க ஏற்கனவே, திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், கடந்த மாதம் 20க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை தொடங்குவதாக சீனா கூறியது. சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறைஅளித்து நீட்டித்து வருகின்றன.