மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளின் தொண்டர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்று உத்தரபிரதேசத்தில் நடந்தது. இதில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் வேண்டும் என குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாட்டில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையை ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டத்தில் சேர்த்து உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் அவசியம். 2 குழந்தைகள் திட்டத்தையே நாங்கள் ஆதரிக்கிறோம். எனினும் இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பகவத் கூறும்போது, ‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஒரு தன்னம்பிக்கையான சூழல் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டத்தின் யதார்த்தத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை’ என்று குறிப்பிட்டார்.