மக்களை தேடி மருத்துவம் என்ற உலகத்துக்கே எடுத்துக்காட்டான புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தை வருகிற 5-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள கிராமப்பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
பொதுவாக தேவைகளுக்காக மக்கள்தான் அரசை தேடி செல்ல வேண்டி இருக்கும். ஆனால் அரசே மக்களை நாடிச்சென்று அவர்கள் தேவையறிந்து சேவை செய்ய வேண்டும் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
அதன்படி இந்த முன்னோடி திட்டமும் அவரது எண்ணத்தில் உதித்தது தான்.
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் மாதம்தோறும் 20 லட்சம் பேர் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட வியாதிகளுக்காக மருந்து மாத்திரைகள் வாங்கி செல்கிறார்கள்.
கடந்த 1½ ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பலர் மருந்துகளை வாங்கி முறையாக பயன்படுத்தவில்லை. இதனால் பலருக்கு உடல்நிலை மோசமாக பாதித்தது. அதிக அளவில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இந்த மாதிரியான நாட்பட்ட வியாதிகளில் உள்ளவர்கள், முறையாக மருந்துகள் சாப்பிடாதது உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் பலியாகிறார்கள்.
அந்த நோயாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு வீடு தேடி சென்று மாதம்தோறும் தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
முதலில் வீடு வீடாக சென்று நோயாளிகள் கண்டறியப்படுவார்கள். மேலும் தொற்றாத நாட்பட்ட வியாதிகளான காசநோய், புற்றுநோய் ஆகிய நோயாளிகளுக்கும் மாத்திரைகள் வழங்கப்படும்.
இந்த மாதிரியான நோய்கள் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல் இருக்கும். அவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு வீடு தேடி சென்று மருத்துவ உதவி வழங்கப்படும்.
சிறுநீரக செயலிழப்பால் வாரம் இருமுறை டயாலிசிஸ் செய்பவர்களும் பெருமளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வீடுகளிலேயே டயாலிசிஸ் மேற்கொள்ள மருத்துவ கருவியுடன் செல்வார்கள்.
முடக்குவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீடுகளிலேயே ‘பிசியோதெரபி’ சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த மகத்தான திட்டம் மூலம் வரும் காலத்தில் உயிரிழப்புகள் பெருமளவு குறைக்கப்படும்.
இந்த முன்மாதிரி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் 5-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
இதற்காக பிரமாண்ட மேடை எதுவும் கிடையாது கிராமத்து சூழலில் அங்குள்ள ஆலமரத்தடியில் வைத்து தான் இந்த மாபெரும் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
திட்டம் தொடங்கப்பட்டதன் அறிகுறியாக சில வீடுகளுக்கு நேரில் சென்று மாத்திரைகளை வழங்குகிறார்.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதையும் அவர் பார்வையிடுகிறார்.
தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பெட்ட முலாயம் என்ற மலை கிராமம். அங்கு வாழும் மலைவாழ் மக்கள் 18 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டும். அந்த கிராமத்துக்கு நடந்து சென்று பார்வையிட்டேன்.
அப்போது தங்கள் கிராமத்தின் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் ஒன்று நிரந்தரமாக தேவை என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் கோரிக்கையை முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதை பரிசீலித்த முதல்வர், அவர்களுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்த ஆம்புலன்சையும் நிகழ்ச்சியின்போது ஒப்படைக்கிறார்.
ஒரு காலை இழந்த 2 பேருக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் செயற்கை கால்களையும் வழங்குகிறார்.
கிருஷ்ணகிரியில் முதல்வர் தொடங்கி வைத்ததும் உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கி வைக்கப்படும். அந்த நிகழ்வுகளையும் அங்கிருந்தபடி வீடியோவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.