Tamilசெய்திகள்

மக்களை தேடி மருத்துவம் தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவுக்கே முன்னோடியாக மக்களை தேடி மருத்துவ திட்டம்தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கத்தை அறிந்து மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த திட்டம் மூலம் சிகிச்சை தேவைப்படுபவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களை கண்டறிந்தும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

மக்களை தேடி மருத்துவம் என்ற சேவையின் மூலம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 30 லட்சம் குடும்பத்தை சேர்ந்த 1 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்சனை போன்ற 40-க்கும் மேற்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சையும் இத்திட்டத்தில் விரைவில் சேர்க்கப்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் சூழலை மாற்ற இந்த புதிய திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் 25 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியாற்றுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.