மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
பொதுவாக தேவைகளுக்காக மக்கள்தான் அரசை தேடி செல்ல வேண்டி இருக்கும். ஆனால் அரசே மக்களை நாடிச் சென்று அவர்கள் தேவையறிந்து சேவை செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவதற்காகவும், சிகிச்சை அளிப்பதற்காகவும் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது.
விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் தற்போது அரசு மருத்துவமனைகளில் நீரிழிவுக்கும், ரத்த அழுத்தத்துக்கும் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற 20 லட்சம் பேரின் வீடு தேடி சென்று மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட உள்ளது.
இந்த 20 லட்சம் பேரைத் தவிர, அரசு மருத்துவமனைகளுக்கும் வராத மலைவாழ் மக்கள், தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடுகிற மக்களும் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
இதற்கு முன்னோட்டமாக திட்டம் தொடங்கப்பட்டதும், சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளியின் இல்லத்திற்கே நேரடியாக சென்று மருந்துகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மற்றொரு பயனாளியின் வீட்டிற்கு சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி சிகிச்சையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
தொடர்ந்து செவிலியர் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையாளர்களுக்கான 3 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார்.
பின்பு விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பார்வையிட்டார். பின்னர் 2 பேருக்கு மருத்துவ உபகரணங்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்பு தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டமுலாயம் மலை கிராம மலைவாழ் மக்களுக்கான 108 அவசர ஆம்புலன்சு சேவையை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பிறகு காணொலி காட்சி மூலமாக பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் 1 லட்சம் தொழிலாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் காந்தி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.