தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியில் நாளை (வியாழன்) தொடங்கி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மாதம் தோறும் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
அதேபோல் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு ஒன்றிரண்டு முறை டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். புற்றுநோய் பாதிப்பும் அதிக அளவில் இருக்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த நோயாளிகளில் பலர் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள்.
எனவே இந்த மாதிரி நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடு வீடாக சென்று மாதந்தோறும் தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவது, டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கையடக்க கருவிகளுடன் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிப்பது, பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் பிசியோதெரபிஸ்டுகள் மூலம் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிப்பது ஆகியவைதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஓசூர் செல்கிறார். 5.25 மணிக்கு ஓசூர் விமான நிலையம் சென்றடைகிறார்.
அங்கிருந்து காரில் கிளரெஸ்டா ஓட்டல் செல்கிறார். இரவில் அங்கு தங்குகிறார்.
நாளை (வியாழன்) காலை 9.30 மணிக்கு ஓசூரில் இருந்து சூளகிரி புறப்பட்டு செல்கிறார். அந்த கிராமத்தில் விழாவுக்காக திறந்தவெளி மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் விழாவில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தொடக்க விழாவையொட்டி சில வீடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மருந்து மாத்திரைகள் வழங்குகிறார். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதையும் அவர் பார்வையிடுகிறார்.
தனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டமுலாயம் என்ற மலை கிராமத்தில் வாழும் மக்கள் 18 கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டும். கடந்த மாதம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த கிராமத்துக்கு நடந்து சென்று குறை கேட்டார். அப்போது அந்த கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வசதி நிரந்தரமாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு மா.சுப்பிரமணியன் கொண்டு சென்றார். அவர்களின் கோரிக்கையை முதல்- அமைச்சர் ஏற்றுக்கொண்டார். நாளை நடைபெறும் விழாவில் அந்த கிராமத்துக்கு இலவச ஆம்புலன்சையும் வழங்குகிறார்.
இதுதவிர ஒரு காலை இழந்த இரண்டு பேருக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் செயல்படும் செயற்கை கால்களையும் வழங்குகிறார். சூளகிரியில் முதல்வர் தொடங்கி வைத்ததும் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்படும்.
சூளகிரி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து காரில் ஓசூர் விமான நிலையம் செல்கிறார். காலை 11 மணிக்கு ஓசூரில் இருந்து சென்னை புறப்படுகிறார்.
முதல்வர் வருகையையொட்டி ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.