மக்களே உஷார்! – தங்கம் விலை இனிய உயர தொடங்குமாம்
தங்கம் விலை கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 900-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் விலை அதிகரித்து, கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 902 என்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-ம் ஒரே நாளில் உயர்ந்தது. அதேபோல், நேற்றும் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு ரூ.500-ம் அதிகரித்து, ஒரு கிராம் 39 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி யிடம் கேட்டபோது, ‘அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமுக உறவு ஏற்பட்டு இருப்பதால், அவர்களுக்கு இடையேயான வர்த்தக உறவு பிரகாசமாகி இருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும். அதனால் தான் தங்கம் விலை அதிகரித்து இருக்கிறது. இனிவரக்கூடிய நாட்களிலும் தங்கம் விலை மேலும் உயரும்.” என்றார்.