தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமானுக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும்.
இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவானால் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை! இது போன்ற நிகழ்வுகளை மட்டும் பணமாக்க நினைக்கும் ஊடகங்கள் மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி விடுகின்றன. மக்களும் பொது நல சிந்தனையின்றி கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுகின்றனர்.
மக்களும் ஊடகங்களும் மனது வைத்தால் மட்டுமே அனைத்து மாற்றங்களும் நிகழும்! அதுவரை வெறும் புலம்பலிலேயே மக்கள் வாழ்வு முடிந்து போகும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.