மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கோவை மாநகராட்சி 27 மற்றும் 28-வது வார்டு பகுதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் வழங்கினார்.
இந்த விழா முடிந்ததும் எஸ்.என்.ஆர் கல்லூரியில் இருந்து கார் மூலமாக காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு சொந்தமான மைதானத்துக்கு செல்கிறார். அங்கு மாநகராட்சி சார்பில் 47 ஏக்கர் பரப்பளவில் ரூ.133.21 கோடி மதிப்பில் அமைய உள்ள செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மக்களுடன் முதல்வர் திட்டம் நடக்கும் எஸ்.என்.ஆர் கல்லூரி பகுதி, காந்திபுரம் நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை உள்பட அனைத்து பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் விழா நடைபெறும் இடங்கள், முக்கிய பகுதிகளில் சோதனையும் மேற்கொண்டனர்.