X

மக்களுக்கு சேவை செய்வதற்கான விருப்பத்தை உருவகப்படுத்தியவர் காமராஜர் – ராகுல் காந்தி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது முகநூல் பதிவில், “தமிழகத்தின் முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, திரு காமராஜரின் பிறந்தநாளில் அவர்களுக்கு பணிவான அஞ்சலிகள். ஒரு உயர்ந்த தலைவர், மக்களுக்கு சேவை செய்வதற்கான விருப்பத்தையும், நேர்மையையும் அவர் உருவகப்படுத்தினார். அவரது தொலைநோக்கு தலைமை தமிழகத்தின் வளர்ச்சியின் பொற்காலத்தை முன்னறிவித்தது” என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ” நமது தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான காமராஜரின் பிறந்தநாள் இன்று. பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனில் தமிழகத்தின் சிறந்து விளங்குவதற்கு அடித்தளமிட்டவர். தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்றியவர். காமராஜர் அவரது எளிமை, ஒருமைப்பாடு மற்றும் அடக்கத்திற்கு அடையாளமானவர் ” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “தென்னக தலைவர் குமாரசாமி காமராஜூக்கு மரியாதை செலுத்துகிறோம். முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பிரிக்கப்படாத சென்னை மாநில முதல்வருமான அவர், தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். இன்று, தேசத்திற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக நாங்கள் அவரை நினைவுக்கூறுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.