X

மக்களின் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன் – வெற்றி பெற்ற வசந்தகுமார் பேட்டி

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வசந்தகுமார் 6 லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்றார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை காட்டிலும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து வசந்தகுமாருக்கு தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் வடநேரே வெற்றி சான்றிதழை வழங்கினார். பின்னர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னை கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவித்த ராகுல்காந்திக்கும், என்னை வெற்றிபெற வைத்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பக்கத்து தொகுதியான நாங்குநேரியில் எம்.எல்.ஏ. ஆக இருந்து செய்த சேவைகளை சமுதாய பணிகளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எனது முதல் பணி குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான். தேனி ஆராய்ச்சி, ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவேன். இது தொடர்பாக ஏற்கனவே சில நிறுவனங்களிடம் நான் பேசி உள்ளேன். மத்தியில் காங்கிரஸ் அரசு அமையவில்லை என்ற போதும் அது எனது மக்கள் பணியை பாதிக்காது.

குமரி மாவட்ட வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர்களை எந்த நேரத்திலும் சந்தித்து பேசுவேன். மத்திய அமைச்சராக இருந்தவர் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதே சமயத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் எனக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது இல்லை. கடந்த ஐந்தாண்டு கால மோடி அரசின் பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தமிழகத்தில் எதிரொலித்திருக்கிறது. காங்கிரஸ் பின்னடைவிற்கு என்ன காரணம் என்பதை அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி ஆலோசனை நடத்தி இனி என்ன செய்ய வேண்டும் என்று அறிவிப்பார்கள். பாரதிய ஜனதா கட்சியிலும் தற்போது மோதல் வெடித்துள்ளது. பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி தயாராக இருந்து வருகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்.க்கு மிகவும் நெருக்கமானவர். அந்த வகையில் பா.ஜ.க. இரண்டாக உடையலாம் என்று கருத்து உள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட தமிழக விரோத போக்கை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளாது என்ற நம்பிக்கை உள்ளது. மோடி, பா.ஜ.க.வுக்கு மட்டும் அல்ல நாட்டுக்கும் பிரதமர், தமிழக நலன் கருதி மத்திய அரசு செயல்படும் என்று கருதுகிறோம். தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.பி.க்கள் தமிழர் நலனுக்காக ஒட்டு மொத்தமாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags: south news