மக்களவையில் பா.ஜ.க – திமுக எம்.பிக்கள் இடையே கடுமையான வாக்குவாதம்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை மக்களவை வழக்கம்போல் 11 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கிய சிறிது நேரத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கான உரிய வெள்ள நிவாரணத் தொகையை ஒதுக்காதது குறித்து பேசினார்.
அப்போது பா.ஜனதா எம்.பி.யும், மத்திய இணை மந்திரியுமான நிதியானந்த ராய் குறிக்கிட்டதாக தெரிகிறது. இதனால் டி.ஆர். பாலு இணை மந்திரியை கடுமையாக விமர்சித்தார். நிதியானந்த ராய் எம்.பி.யாக இருக்கவே தகுதி இல்லை. மத்திய அமைச்சராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ஒரு ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா எம்.பி.க்கள் கோசம் எழுப்பினர். இதனால் இரண்டு கட்சிக்கு எம்.பி.களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மத்திய மந்திரியை விமர்சித்து டி.ஆர். பாலு பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
மற்றொரு திமுக எம்.பி.யான ராசா பேசும்போது, பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என விமர்சித்தார். “நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாநில பேரிடம் நிதி என்பது பேரிடரின்போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும். இது அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானது.
நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குஜராத் போன்ற பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல, அனைத்து மாநிலங்களுக்கு சமமாக வழங்க வேண்டும். தேசிய பேரிடம் நிவாரண நிதியில் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சமமான நிவாரணை நிதி வழங்கும் நிலையை அளிக்கும் வகையில் புதிய விதிகளை வகுக்க வேண்டும்” என்றார்.