மகாராஷ்டிர பிரச்சினையால் பாராளுமன்றத்தி, அமளி – இரு அவைகளும் ஒத்திவைப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதனால் தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டது.

அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவு அல்ல என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடனடியாக விளக்கம் அளித்தார். அத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தங்கள் கூட்டணிக்கு 165 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக சிவசேனா கூட்டணி தலைவர்கள் கூறினர். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் மாளிகையில் சமர்ப்பித்துள்ளனர். பெரும்பான்மை இல்லாத நிலையில், பாஜக ஆட்சியமைத்தது ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்றம் இன்று காலை கூடியதும், இரு அவைகளிலும் மகாராஷ்டிரா விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பினர். இந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பதாகைகளை ஏந்தியபடி, சபாநாயகரின் இருக்கை முன்பு சென்று முழக்கங்கள் எழுப்பினர். அமளியை நிறுத்தாவிட்டால் சில உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டியிருக்கும் என அவைத்தலைவர் எச்சரித்தார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து மக்களவை பகல் 12 மணி வரையிலும், மாநிலங்களவை 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools