X

மகாராஷ்டிரா எம்.பி நவனீத் ராணாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் அமராவதியில் உள்ள பட்னேரா சட்டசபை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரவி ரானா. 3வது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ள இவரது மனைவி நவ்னீத்
ரானாவும் சுயேட்சை எம்.பி.யாக உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை பாந்திராவில் உள்ள முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லம் முன் அனுமன் பஜனை பாட இருக்கிறோம் என ரவி மற்றும் நவ்னீத் தம்பதி கூறினர்.
இதற்கு சிவசேனாவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக மாதோஸ்ரீ வீட்டின் அருகில் சிவசேனாவினர் அதிகளவில் திரண்டனர். ரவி மற்றும் நவ்னீத் ராணாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், மாதோஸ்ரீ அருகில்
வந்தால் தக்க பாடம் புகட்டப்படும் என்றனர்.

இதற்கிடையே, ரவி ராணா மற்றும் நவனீத் ராணா என இருவர் மீதும் பாம்பே போலீஸ் சட்டத்தின்படி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்றும் பதிவாகி உள்ளது. மக்களைத்
தூண்டிவிடும் வகையில் பேசியதற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் சுயேட்சை எம்.பி. நவனீத் ராணாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.