Tamilசெய்திகள்

மகாராஷ்டிரா அமைச்சரவையில் 4 முக்கிய அமைச்சர்களை நீக்க உத்தரவிட்ட அமித்ஷா? – சஞ்சய் ராவத் தகவல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை கைப்பற்றி, பா.ஜனதா துணையுடன் ஏக்நாக் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அவருடைய கட்சியனருக்கும் உத்தவ் தாக்கரே கட்சியினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது.

பா.ஜனதாவின் பட்நாவிஸ் துணை முதல்வராக இருக்கிறார். மகாராஷ்டிரா மாநில மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சலசலப்பு ஏற்படும் என உத்தவ் தாக்கரே கட்சியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சிவசேனாவின் நான்கு முக்கிய மந்திரிகளை நீக்குமாறு ஏக்நாத் ஷிண்டேயிடம் கேட்டுக்கொண்டதாக ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில் ”மந்திரிசபை மாற்றம் குறித்து அமித் ஷா சில தகவல்களை ஷிண்டேவிடம் தெரிவித்துள்ளார். விரிவாக்கம் அதன்படி நடைபெற்றால் ஷிண்டே, அவரது முக்கியமான நான்கு மந்திரிகளை நீக்க வேண்டியிருக்கும். இது என்னுடைய தகவல்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷிண்டேவின் சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத் கூறுகையில் ”மற்றவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் அவருடைய பழக்கமாக இது இருக்கலாம்” என குறிப்பிட்டார். ஒருவேளை முக்கிய மந்திரிகள் நீக்கப்பட்டால் சலசலப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, பாஜனதா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களை இந்தக் கூட்டணி பிடித்தது. என்றாலும், முதல் பதவி வேண்டும் என உத்தவ் தாக்கரே அடம் பிடித்ததால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது. பின்னர் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சிவசேனா கட்சியை கைப்பற்றி முதல்வர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.