Tamilசெய்திகள்

மகாராஷ்டிராவில் பக்தர்கள் மீது போலீஸ் தடியடி – சஞ்சய் ராவத் எம்.பி கண்டனம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் உள்ளது ஆலந்தி. இங்கு கிருஷ்ணரின் வடிவமாக பார்க்கப்படும் சுவாமி விதோபா திருத்தலம் அமைந்துள்ளது.

இங்கு வார்காரி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். கடந்த முறை ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த முறை 75 பேர் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், ஒரே நேரத்தில் அதிகமானோர் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் வார்காரிஸ் பக்தர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் பக்தர்கள் மீது தடியடி நடத்தினார்கள். வார்காரி பக்தர்கள் மீது தடியடி நடத்துவது, மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவே முதல் முறையாகும்.

இந்த சம்பவத்திற்காக உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி. சஞ்சய் ராவத் ஆளுங்கட்சியை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ”ஐயோ.. இந்துத்துவா அரசின் பாசாங்குகள் அம்பலமானது.. முகமூடி அவிழ்ந்தது. மகாராஷ்டிராவில் முகலாயர்கள் மறுஅவதாரம் எடுத்துள்ளனர்” எனக்குறிப்ட்டுள்ளார்.

”ஸ்ரீ ஷேத்ரா ஆலந்தியில் வார்காரி பக்தர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய விதம் மிகவும் மூர்க்கத்தனமானது. மகான் ஞானேஸ்வர் மகாராஜ் முன்னிலையில் வார்காரிகளை அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. வார்காரி பிரிவினர் மீது அரசுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கிறதா அல்லது இல்லையா?” என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.