மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும், முதல்-மந்திரி பதவி போட்டியால் ஆட்சியமைக்க முடியவில்லை. எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் பணிகளை சிவசேனா தொடங்கியது. மூன்று கட்சி தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி ஆட்சியமைக்கும் முடிவுக்கு வந்தனர். இதனால் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியானதாகவே கருதப்பட்டது.

ஆனால், மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று காலை பொறுப்பேற்றது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்.

புதிய முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக முதல்வரும் துணை முதல்வரும் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள் என நம்புவதாகவும் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools