X

மகளிர் ரூ.1000 உதவித்தொகை திட்டம் – இன்று முதல் 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1,428 ரேஷன் கடைகளில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவாகியுள்ளன.

இதில் முதல் கட்டமாக 704 ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1,730 சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்றுடன் முதல் கட்ட முகாம் முடிவடைந்தது.

மீதமுள்ள 724 ரேஷன் கடைகளில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற உள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு வருகிற 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் 2-வது கட்ட முகாம்கள் இன்று (சனிக்கிழமை) தொடங்குகின்றன.

சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நகரப் பகுதி மக்களை மையப்படுத்தி இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களை வருகிற 16-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான முதல் கட்ட முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த முகாம்கள் மூலம் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டன. மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கை தபால் அலுவலகங்களிலும் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் மனோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், பிரதமரின் கிசான் மற்றும் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களின் பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம்.
இதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங்கலாம். அவ்வாறு தொடங்கப்படும் கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்புத் தொகை எதுவும் கிடையாது. தபால் காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கைப்பேசி-பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை கொண்டு விரல் ரேகை மூலம் சில நிமிடங்களில் கணக்கைத் தொடங்கலாம். மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத் தொகையை அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.