மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 23 ரன்கள் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 34 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் யஷ்திகா பாட்டில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹெய்லியுடன் நாட் ஷிவர் பிரண்ட் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த மும்பை அணி, 159 ரன்கள் சேர்த்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹெய்லி 77 ரன்களுடனும், நாட் ஷிவர் பிரண்ட் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.