மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் – பெங்களூர், உ.பி அணிகள் இன்று மோதல்
முதலாவது மகளிர் பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பிரா போர்ன், நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பட்டேல் ஆகிய 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 12-வது ‘லீக்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 55 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெய்ன்ட்சை மீண்டும் வீழ்த்தியது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய குஜராத் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்னே எடுக்க முடிந்தது. மும்பை அணி தோல்வியை தழுவாமல் தொடர்ந்து 5-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
13-வது ‘லீக்’ ஆட்டம் டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அலிசா ஹீலி தலைமையிலான உ.பி. வாரியர்ஸ்-ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
உ.பி.அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. டெல்லி (42 ரன்), மும்பை (8 விக்கெட்) அணிகளிடம் தோற்று இருந்தது. பெங்களூருவை மீண்டும் தோற்கடித்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உ.பி.வாரியர்ஸ் இருக்கிறது.
பெங்களூரு அணி தான் மோதிய 5 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லியிடம் 2 முறையும் மும்பை, குஜராத், உ.பி. வாரியர்சிடம் தலா 1 முறையும் தோற்று இருந்தது. தோல்விப் பாதையில் இருந்து மீண்டு உ.பி. அணிக்கு பதிலடி கொடுத்து பெங்களூரு முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.