Tamilவிளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் – பெங்களூர் அணியை வீழ்த்தி உ.பி அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் ஆடிய பெங்களூரு அணி, உ.பி. அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அதிரடியாக ஆடிய எல்லிஸ் பெர்ரி 39 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 52 குவித்து ஆறுதல் அளித்தார். சோபி டிவைன் 36 ரன்கள், ஸ்ரேயா பாட்டீல் 15 ரன்கள் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில், 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. உ.பி. வாரியர்ஸ் தரப்பில் சோபி எக்லஸ்டோன் 4 விக்கெட், தீப்தி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணியின் துவக்க வீராங்கனைகள் தேவிகா வைத்யா, அலிசா ஹீலி (கேப்டன்) இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி நிலைத்து நின்று வெற்றியை எட்டினர். இவர்களை பிரிக்க அனைத்து பந்துவீச்சாளர்களையும் மாறி மாறி பந்து வீச செய்தனர். ஆனால் அவர்களின் முயற்சி வீணானது.

பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்ட அலிசா ஹீலி 96 ரன்களும், தேவிகா 36 ரன்களும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 13 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியதால், 10 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் வெற்றி பெற்றது.

47 பந்துகளில் 18 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 96 ரன்கள் விளாசிய அலிசா ஹீலி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.