X

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் – டெல்லியை வீழ்த்தி மும்பை சாம்பியன் பட்டம் வென்றது

முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர், மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. கேப்டன் மெக் லேனிங் 35 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய ஷிகா பாண்டே, ராதா யாதவ் இருவரும் தலா 27 ரன்கள் அடித்தனர்.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீராங்கனைகள் ஹெய்லி மேத்யூஸ் 13 ரன்களிலும், யஸ்திகா பாட்டியா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் நாட் ஷிவர் பிரண்ட்- ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

கேப்டன் கவுர் 37 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் ஷிவர் பிரண்ட் அரை சதம் கடக்க, மும்பை அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. நாட்ஷிவர் பிரண்ட் 60 ரன்களுடனும், அமலியா கெர் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்ததால், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது.