X

மகளிர் பிரீமியர் லீக் கிர்க்கெட்டின் இறுதிப் போட்டி – மும்பை,டெல்லி அணிகள் நாளை மோதல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டியை போலவே மகளிருக்கான பிரீமியர் லீக் போட்டி அறிமுகம் செய்தது. முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயின்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 21-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றது. மும்பை, 2-வது இடத்தையும், உ.பி. வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின. பெங்களூரு, குஜராத் அணிகள் முறையே 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின.

நேற்று எலிமினேட்டர் ஆட்டம் நடந்தது. இதில் மும்பை அணி 72 ரன் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய உ.பி. வாரியர்ஸ் 110 ரன்னில் சுருண்டது.

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (26-ந் தேதி) நடக்கிறது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் மேக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஹர்மன் பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும மோதிய லீக் ஆட்டத்தில் தலா ஒன்றில் வெற்றி பெற்றன. மும்பை அணி 8 விக்கெட்டில் வென்று இருந்தது. டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

டெல்லி அணியின் கேப்டன் மேக் லேனிங் 310 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். மும்பை அணியில் புருன்ட் 272 ரன் எடுத்துள்ளார். மும்பை அணியின் சாய்னா இஷாக் 15 விக்கெட் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார்.