மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் – முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்

முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. 87 வீராங்கனைகள் ரூ.59½ கோடிக்கு ஏலம் விடப்பட்டனர். அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வாங்கியது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை அணி வசப்படுத்தியது.

இந்நிலையில், பிரிமீயர் லீக் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். 2-வது, 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி காணும் அணி இறுதிச்சுற்றை எட்டும். மொத்தம் 22 ஆட்டங்கள் நடக்கின்றன. தினமும் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

மார்ச் 4-ம் தேதி டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மறுநாள் இரட்டை ஆட்டங்களாக பெங்களூரு- டெல்லி, உ.பி. வாரியர்ஸ்- குஜராத் அணிகள் சந்திக்கின்றன. மார்ச் 26-ம் தேதி இறுதிப்போட்டி மும்பை பிரபோர்னில் நடைபெறும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools