மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் – முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா நாளை மோதல்
8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீசை வென்று இருந்தது. இங்கிலாந்திடம் மட்டும் 11 ரன்னில் தோற்றது.
3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ள ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் ‘குரூப் 2’ பிரிவில் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தகுதி பெற்றுவிட்டது. ‘குரூப் 1’ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி அரை இறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், நாளை நடைபெறும் முதல் அரை இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. வரும் 26-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.