மகளிர் கிரிக்கெட் – இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இதில் நடந்த முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டும் எடுத்தது.
இலங்கை அணி தரப்பில் கேப்டன் சமாரி அத்தபத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியினர் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி கேப்டன் அத்தபத்து இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது மற்றும் தொடர்நாயகி விருதை வென்று அசத்தியுள்ளார்.
அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.