மகளிர் உலக கோப்பை தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை
குறுக்கீடு காரணமாக போட்டி 20 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டாட்டின் 21 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் நீடா தர் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து, 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை முனீபா அலி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.